தமிழகம், புதுச்சேரியில் 4 தொகுதிகளுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரும் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அதிமுக தலைமைக்கழகம் கூறியுள்ளது. இதன்படி, அரவக்குறிச்சி தொகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 4 அமைச்சர்கள் உட்பட 5 பேர் பொறுப்பாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தொகுதிக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 7 அமைச்சர்களும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கு, தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோர் அடங்கிய 5 பேர் குழுவை அதிமுக தலைமைக்கழகம் நியமித்துள்ளது.